செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை சார்பில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) புது டெல்லி நிதியுதவியுடன், “பசுமை, புத்திசாலித்தனம், வேகம்: மின்சார வாகனங்களில் இயற்கை அரைமின்களின் பங்கு (Green, Smart, and Speed: Role of Organic Semiconductors in Electric Vehicles)” என்ற தலைப்பில், அக்டோபர் 13 முதல் 18 வரை இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி (Faculty Development Programme) நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 161 பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 13 அமர்வுகளாக நடைபெற்ற இந்தப் பயிற்சி, இயற்கை அரைவினையூக்கி (Organic Semiconductor) பொருட்களின் சமீபத்திய முன்னேற்றங்களையும், அவை மின்சார வாகனங்களில் நிலைத்தன்மை மற்றும் சக்தி திறனை மேம்படுத்தும் விதத்தையும் எடுத்துரைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கவிழாவிற்கு செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் செ. பாபு தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் பா. கவித்ரா நந்தினி, நிர்வாக இயக்குநர் திரு. ம. கார்த்திக் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சு. இராமபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
துறைத் தலைவர் முனைவர் க. வித்யாவதி வரவேற்புரையில் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 13 நிபுணர்கள் தங்கள் துறைகளில் சிறப்பு உரைகளை ஆற்றி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள பயிற்சிகளை வழங்கினர்.
ஆறு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது. பங்கேற்பாளர்கள் அனைவரும், இத்திறன் மேம்பாட்டு பயிற்சி தங்களது தொழில்முறை அறிவை விரிவுபடுத்தியதுடன், மின்சார வாகனத் துறையில் புதுமை மற்றும் நிலைத்தன்மை நோக்கில் புதிய ஊக்கத்தை அளித்ததாக தெரிவித்தனர்.
